புதுவை காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட தனவேலு எம்.எல்.ஏ. இன்று சட்டசபையில் உள்ள அவரின் அலுவலக அறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். காங்கிரஸ் கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. முதல்-அமைச்சர், அமைச்சர்களின் ஊழலைத் தான் தட்டி கேட்டேன். என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு மாநில காங்கிரசுக்கு அதிகாரம் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
எனக்கு விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும், கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதற்குரிய பதில் தர தயாராக உள்ளேன். முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்பதையே நான் கூறுகிறேன். அரசு துறைகளில் பல துறைகளை மூட அமைச்சர்கள்தான் காரணமாக உள்ளனர். நான் கை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
நான் 5 ஆண்டு நீடிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ராகுல்காந்தி, சோனியாகாந்தியை சந்திக்க நான் நேரம் கேட்டுள்ளேன். அவர்கள் நேரம் ஒதுக்கித் தருவார்கள் என நம்புகிறேன். நேரம் ஒதுக்கித்தந்தால் நான் அவர்களிடம் முதல்- அமைச்சர், அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரத்துடன் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.